மெரினா கடற்கரையில் அழகுக்கு அழகு சேர்க்கும் நீரூற்று... சென்னை மாநகராட்சியின் கைவண்ணம்...

சென்னை மெரினா கடற்கரை, காந்தி சிலையின் பின்புறம் செயல்படாமலிருந்த நீரூற்று புதுப்பிக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரித்து, மெரினா கடற்கரைக்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளது சென்னை மாநகராட்சி.

மெரினா கடற்கரையில் அழகுக்கு அழகு சேர்க்கும் நீரூற்று... சென்னை மாநகராட்சியின் கைவண்ணம்...

சென்னை மாநகரை அழகுபடுத்தும் வகையில், சென்னை மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் மூலம் சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்  அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பூங்காக்கள் அமைப்பது,சுவரொட்டிகள் அகற்றி ஓவியங்கள் வரைவது, பொது இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றுவது என பல்வேறு நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி ஈடுப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையின் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான மெரினா கடற்கரை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாக உள்ளதால் மெரினா கடற்கரையை அழகுப்படுத்த மாநகராட்சி தனி கவனம் செலுத்தி வருகிறது. பூங்காக்கள் அமைப்பது, இரும்பு பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்ட சுறா, நண்டு, இறால் சிற்பங்கள் மிகுந்த கலை நயத்துடன், தத்ரூபமாக ஆங்காங்கே நிறுவுவது என‌ பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், கடற்கரைக்கு மேலும் அழகூட்டும் வகையில், காந்தி சிலையின் பின்புறம் செயல்படாமலிருந்த நீரூற்று புதிபிக்கப்பட்டு வண்ண விளக்குகள் பொறுத்தப்பட்டு மெரினா கடற்கரைக்கு கூடுதல் அழகை சேர்த்து உள்ளது சென்னை மாநகராட்சி. நேற்று இரவு முதல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நீரூற்று செயல்பாட்டுக்கு வந்துள்ளதோடு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.