"மதுரை எய்ம்ஸ் டெண்டர் தேர்தலுக்கான நாடகமாக இருக்கலாம்" முதலமைச்சர் விமர்சனம்!!

"மதுரை எய்ம்ஸ் டெண்டர் தேர்தலுக்கான நாடகமாக இருக்கலாம்" முதலமைச்சர் விமர்சனம்!!

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும், இல்லையென்றால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரில் தென்மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றது திமுக ஆட்சி என கூறியுள்ளார். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கொண்டு வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னுரிமை தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், வாக்காளர்கள் பட்டியலை சரிப்பார்ப்பதே முதல் பணி என திமுக முகவர்களுக்கு அறிவுறுத்திய அவர், ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்கு திமுக அரசு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக பட்டியலிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சாடிய முதலமைச்சர், அமைச்சர் எ.வ. வேலுவின் கருத்தை வெட்டி, ஒட்டி வாட்ஸ் அப்பில் பரவி  
வரும் செய்திகளை பிரதமர் மோடி நம்புவது அழகல்ல என்றும் கூறியுள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் அமைக்க டெல்லியில் இருந்து டெண்டர் வரவே 9 ஆண்டுகாலம் ஆகிவிட்டது எனவும், தற்போது டெண்டர் வெளியாகியுள்ளதும் தேர்தலுக்கான நாடகமாக இருக்கலாம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். ராமேஸ்வரத்தை சர்வதேச சுற்றுலா தளமாக மாற்றுவேன் என்று மோடி அளித்த வாக்குறுதி எங்கே? எனவும், தனுஷ்கோடிக்கு அமைத்துத் தருவதாக சொன்ன ரயில் பாதை எங்கே என்றும் முதலமைச்சர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும், தி.மு.க. பேசும் கொள்கைகளை மற்ற கட்சியினரும் பின்பற்றிப் பேசுகிறார்கள் என்பது தான் பா.ஜ.க.விற்கு எரிச்சலாக இருக்கிறது என்று கூறிய முதலமைச்சர், இண்டியா கூட்டணி வெற்றி பெறாவிட்டால் இந்தியாவை காப்பாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க || புனித ஜார்ஜ் கோட்டையும்...காதலும்!!