விளையாட்டு பிரிவில் இட ஒதுக்கீடு: "அரசின் கொள்கை முடிவு" சென்னை உயர் நீதிமன்றம்!

விளையாட்டு பிரிவில் இட ஒதுக்கீடு: "அரசின் கொள்கை முடிவு" சென்னை உயர் நீதிமன்றம்!

தமிழ்நாட்டில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் விளையாட்டு பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சேலம் மாவட்ட இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ்நாட்டில் பல பள்ளி மாணவர்கள் விளையாட்டு தங்களது வாழ்க்கையாக தேர்ந்தெடுத்து பள்ளியில் இருந்தே பயிற்சி மேற்கொண்டு வருவகின்றனர். ஆனால் அவ்வாறு இருக்க கூடிய மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த கூடிய வகையில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட மேற்படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. 

தற்போது, மருத்துவ படிப்பில் 7 இடங்களும், மூன்று ஆண்டுகள் சட்டப்படிப்பில் 6 இடங்களும், ஐந்து ஆண்டுகள் சட்டப்படிப்பில் ஏழு இடங்களும்  ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பல ஆண்டுகளுக்கு முன் இந்த இடஒதுக்கீடு வழங்கிய நிலையில், தற்போது மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு ஏற்ப விளையாட்டு பிரிவில் இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.வி. பூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு பிளீடர் முத்துக்குமார், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு  கலை மற்றும் அறிவியல், பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் படுவதாகவும், மனுதாரரின் கோரிக்கை பரிசீலித்து பதிலளிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, விளையாட்டு வீரர்களுக்கு உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு எனவும், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க:"மே மாதத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை உயர்வு" சென்னை மெட்ரோ இரயில்!