"அந்த இத்து போன பாரத்தில் எனக்கு உடன்பாடில்லை" எம்பி அப்துல்லா!!

தமிழ்நாட்டில் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாக, நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் நேற்று தனது பயணத்தை தொடங்கியது. இந்த ரயிலை நேற்று, பிரதமர் மோடி வீடியோ வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஒரு சிலர், இந்த நெல்லை - சென்னை இடையிலேயான ரயில் மூலம் பயண நேரம் குறையும் என மகிழ்ந்தாலும், ஒரு சிலர் இதன் கட்டணத்தொகை அதிகமாக இருக்கின்றதாகவும், சாமானியர்கள் பயணிக்க இயலாத சூழல் உருவாகியுள்ளதாகவும் கவலை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், எம்பி எம் எம் அப்துல்லா, முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், "புதிய   வந்தேபாரத் ரயிலுக்காக எனக்கு நன்றி தெரிவித்து எழுதி என்னை டேக் செய்துள்ளனர் சில நண்பர்கள்..  ரயில்வேத்துறைக்காக   அதிகம் கோரிக்கைகள் வைத்து நாடாளுமன்றத்தில் பேசுபவன், கடிதங்கள் எழுதுபவன் என்பதால் வந்தே பாரத் ரயிலுக்கும் நான் முயற்சி செய்து இருப்பேன் என நினைத்து ஒருவேளை எனக்கு நன்றி தெரிவித்து இருக்கலாம். உண்மையில் வந்தேபாரத் ரயில் வந்ததற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், " அதற்காக நான் நாடாளுமன்றத்தில் பேசியதும் இல்லை.. அமைச்சர் ரயில்வே வாரியத் தலைவர் உள்ளிட்ட யாருக்கும் கடிதம் அனுப்பவும் இல்லை. வெகுஜன மக்கள் பயணிக்க முடியாத உயர் வகுப்பினருக்காக மட்டுமே இயக்கப்படும் ரயில் அது.. எனவே பெரும்பான்மையினருக்கு பயனில்லாத அந்த இத்துப்போன பாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நாளைக்கு அம்பானிக்கோ அதானிக்கோ சலுகை விலையில் விற்பதற்காக இன்றே ஓட்டப்படும் ஹைகிளாஸ் ரயில்தான் வந்தேபாரத்" எனத் தெரிவித்துள்ளார்.