மேகதாது அணை: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்!

டெல்லியில் வரும் 17ம் தேதி நடைபெறும் காவிரி ஆணையக் கூட்டத்தில் கர்நாடகாவின் மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்க கூடாது என பிரதமர் மோடிக்கு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மேகதாது அணை: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்!

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு, மேகதாது அணையை கட்டும் திட்டம் தொடர்பாக விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என தமிழக அரசு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க தடை கோரியும் உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
 
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.  அதில், காவிரி நதிநீர் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்துவதற்குதான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்துவதுதான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி எனவும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசின் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைக்கான திட்டப் பணிகள் குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பது சரி அல்ல என்றும், இதில் பிரதமர் மோடி தலையிட்டு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்க  முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.