எம்.ஜி.ஆர், ஜெ., படத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் முதல்வர் ஸ்டாலின் படத்தை மாட்டிய திமுக எம்பி... அதிமுக தொண்டர்கள் ஆவேசம்

திப்பனம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா படங்களை அகற்ற கூறிய திமுக எம்.பி. தனுஷ்குமார். உடனடியாக எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா படங்கள் அகற்றப்பட்டு முதல்வர் ஸ்டாலின் படம் வைக்கப்பட்டபோது பரபரப்பு ஏற்பட்டது.

எம்.ஜி.ஆர், ஜெ., படத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் முதல்வர் ஸ்டாலின் படத்தை மாட்டிய திமுக எம்பி... அதிமுக தொண்டர்கள் ஆவேசம்

தென்காசி மாவட்டம். கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் தென்காசி பாராளுமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் தனுஷ்குமார், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் மற்றும் மருத்துவக் குழுவினர் அரியப்பபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், திப்பனம்பட்டி பஞ்சாயத்து அலுவலகம், செட்டியூர் ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்ததுடன், அரசு அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது திப்பனம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தின் முதல் அறையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் படமும், இரண்டாவது உள் அறையில் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவரும் இணைந்திருந்த போட்டோவும் வைக்கப்பட்டு இருந்தது.

அலுவலகத்திற்கு சென்ற திமுக எம்.பி. தனுஷ்குமார் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படத்தை அகற்ற உத்தரவிட்டதுடன், அதே இடத்தில் முதல்வர் ஸ்டாலின் படத்தை வைக்குமாறு கூறினார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படத்தை அகற்றிய அலுவலக பணியாளர்கள் அதே இடத்தில் முதல்வர் ஸ்டாலின் படத்தை மாட்டினர். மேலும் கீழப்பாவூர் யூனியனில் உள்ள அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் படம் வைக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் திமுக எம்.பி. தனுஷ் குமார் உத்தரவிட்டார். இதனால் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய சென்ற இடத்தில் போட்டோவை வைத்து திமுக எம்.பி.தனுஷ்குமார் செய்த அரசியல் விளையாட்டு பொதுமக்கள் மத்தியில் அருப்தியை ஏற்படுத்தியுள்ளது.