கொள்ளையடிப்பதுதான் என் தொழில்.... 70 வயது முதியவரின் வாக்குமூலம்... விசாரித்த போலீசார் அதிர்ச்சி...

சென்னையில் ஷட்டரை உடைத்து கொள்ளையில் ஈடுபடும் கேரளாவைச் சேர்ந்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளையடிப்பதுதான் என் தொழில்.... 70 வயது முதியவரின் வாக்குமூலம்... விசாரித்த போலீசார் அதிர்ச்சி...

சென்னை வடபழனி பேருந்து நிலைய பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் திரிந்த முதியவர் ஒருவரை தியாகராய நகர் உதவி ஆணையரின் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாகவும், மழுப்பலாகவும் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் முதியவரை வடபழனி காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த லாரன்ஸ் (எ) கோபி ( 70) சென்னை மற்றும் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கடைகளின் ஷட்டரை உடைத்து  பணத்தை கொள்ளையடிக்கும் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வருகிறார் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்தது. 

குறிப்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு லாரன்ஸ் சென்னையில் கோடம்பாக்கம், அண்ணா சாலை, வளசரவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றதும், மீண்டும் வெளியே வந்த லாரன்ஸ் தனது சொந்த ஊரான கேரளாவிற்குச் சென்று அங்கு தனது ஷட்டரை உடைத்து கொள்ளையடிக்கும் தொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும், அங்கு போலீசாரிடம் சிக்கிய அவர் கடந்த 5 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவிட்டு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் தான் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார் என்பதும், அங்கிருந்து சென்னைக்கு ரயில் மூலம் வந்த லாரன்ஸ் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஒரு மேன்சனில் அறையெடுத்து தங்கி வடபழனி 100அடி சாலையிலுள்ள ஸ்டூடியோவின் ஷட்டரை உடைத்து 5 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை திருடியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல் லாரன்ஸ் வேப்பேரி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார் என்பதையும் விசாரித்து அறிந்த போலீசார் லாரனசை கைது செய்து அவரிடம் இருந்த பணம் 1,200 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் இன்னும் எங்கெங்கு கைவரிசை காட்டியுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.