ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்..? வெளிநாட்டுக்கு தப்புவதை தடுக்க நடவடிக்கை...

பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்..? வெளிநாட்டுக்கு தப்புவதை தடுக்க நடவடிக்கை...

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து ராஜேந்திர பாலாஜி  தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். 

அவர் பெங்களூருவில் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து தனிப்படையின் ஒரு பிரிவினர் அங்கு சென்றுள்ளனர். இந்நிலையில் தற்போது கேரளாவில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் அவர் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனிடையே  ராஜேந்திர பாலாஜி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் பொருட்டு அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி ஒருவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க பயன்படுத்தப்படுவது தான் லுக் அவுட் நோட்டீஸ். LOC எனப்படும் லுக் அவுட் நோட்டீஸை அனைத்து விமான நிலையங்களுக்கும் காவல்துறையினர் அனுப்பி வைப்பது வழக்கம். இதன்மூலம், குற்றம்சாட்டப்பட்டவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்றால் அவரை விமான நிலைய காவல்துறையினர் எளிதில் கைது செய்ய முடியும்.