தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை அடையாறில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்ற பின்னர் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 63 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. நாளை நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணத்தில் அரசு அலட்சியமாக செயல்பட்டதால்தான் கலவரம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டினார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரைக் கூட இதுவரை அரசுசார்பில் யாரும் சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்றும் குறிப்பிட்டார்.

விசாரணை நடைபெற்று வரும் நிலையிலேயே பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்று டிஜிபி கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினார். திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்று கூறிய பழனிசாமி, நடந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.