கொள்ளிடம் ஆற்றில் நான்காவது நாளாக வெள்ளப்பெருக்கு...! கால்நடைகளுக்கும் பாதுகாப்பு வழங்க கோரிக்கை..!

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் நான்காவது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கு... பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் கால்நடைகளுக்கு தீவனம், புல் வழங்க கோரிக்கை..

கொள்ளிடம் ஆற்றில் நான்காவது நாளாக வெள்ளப்பெருக்கு...! கால்நடைகளுக்கும் பாதுகாப்பு வழங்க கோரிக்கை..!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக வெள்ள நீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு எட்டியதால், வரும் வெள்ளநீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரானது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. 

இதன் காரணமாக ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை,முதலை மேடுதிட்டு, வெள்ளை மணல் கோரைதிட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு மூன்றாவது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் படகுகளின் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

இவர்களுக்கு நான்கு இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பதற்காக கொள்ளிடம் ஆற்றின் கரையிலேயே தற்காலிக பந்தல் அமைத்து வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்காலிக பந்தல்கள் அகற்றப்பட்டு, பாதுகாப்பான பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தார்பாய்கள்,கீற்றுகளை கொண்டு மக்கள் தாங்களாகவே சிறு சிறு கொட்டகைகளை அமைத்து கால்நடைகளை பாதுகாத்து வருகின்றனர். 

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் தங்களின் கால்நடைகளுக்கும் தீவனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றில் அதிகப்படியான வெள்ளநீர் செல்வதால் முதலைகள் கரை பகுதிக்கு வரும் அபாயம் ஏற்படும் என பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றில் தண்ணீரை கடந்து யாரும் சென்று வர வேண்டாம் எனவும் படகுகளின் மூலம் மட்டுமே வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.