காட்பாடி பாலத்தை அதிமுக மாவட்ட செயலாளர் திறந்து வைத்ததற்கு திமுக கண்டனம்!

காட்பாடி பாலத்தை அதிமுக மாவட்ட செயலாளர் திறந்து வைத்ததற்கு திமுக கண்டனம்!

காட்பாடியில் மத்திய அரசின் நிதி உதவியில் சீரமைக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை அதிமுக மாவட்ட செயலாளர் திறந்து வைத்ததை கண்டித்து திமுகவினர் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

காட்பாடி ரயில்வே மேம்பாலம் ஆந்திராவை இணைக்கும் பாலமாகும். இந்த பாலத்தில் பழுது ஏற்பட்டதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த ஒரு மாதகாலமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு மத்திய அரசின் நிதி உதவி மூலம் பழுது பார்க்கும் பணி நடந்து வந்தது. இந்த பணி  முடிந்துள்ள நிலையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களை மட்டும் அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த மேம்பாலத்தை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பார்வையிட வருவதாக இருந்தது. இதனை அறிந்த அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு பாலா பணிகள் சரியாக நடக்கவில்லை  என  குற்றம்சாட்டி தனது ஆதரவாளர்களுடன் மறியலில் ஈடுபட்டார். அதே நேரத்தில் பாலத்தையும் அவரே திறந்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர்  அதிமுக மாவட்ட செயலாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து  அங்கு  வந்த போலீசார் அதிமுகவினரை அப்புறப்படுத்தினார்கள். இதனிடையே   மேம்பாலத்தை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், அதிமுக பிரமுகர் அரைவேக்காட்டு தனமாக நடந்து கொண்டதாக கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மக்களின் உயர் சம்பந்தபட்ட விவகாரத்தில் விளையாடிய அதிமுக மாவட்ட செயலர் மீது  அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.