பதற்றத்துடன் காணப்படும் ஜூஜூவாடி... தமிழக-கர்நாடக எல்லையில் போலீசார் குவிப்பு!!

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நா்காவில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் அத்திப்பள்ளியில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.  அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க அரசு பேருந்துகள்  ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாததால் பொது மக்களின் இயல்பு  வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் தமிழக அரசை கண்டித்தும், காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்தும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எல்லையை முற்றுகையிட முயன்ற போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து  போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். 

இதேபோல் கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் கர்நாடக அமைப்பினர் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்த நிறுத்த முயன்ற போலீசாருக்கு போராட்டகரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

இதனிடையே தமிழக - கர்நாடக எல்லையான ஜூஜூ வாடியை கன்னட அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழக அரசுக்கு  எதிராக முழக்கமிட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கன்னடர்களின் போராட்டம் காரணமாக  தமிழக மாநில எல்லையான ஜூஜூவாடி பகுதியில் தமிழக பதிவு எண் கொண்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்  கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் தமிழ்நாட்டின் அனைத்து பேருந்துகளும் எல்லையான ஓசூரிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால்  மக்கள் பாதிக்கப்பட்டனர். கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனங்கள் மட்டும் அம்மாநிலத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்  ஓசூரில் இருந்து வரக்கூடிய பயணிகள் எல்லையிலேயே இறக்கி விடப்பட்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் அத்திப்பள்ளிக்கு நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

முன்னதாக  தமிழக கர்நாடக எல்லையில் பதற்றம் காரணமாக 100 க்கும் மேற்பேட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.