முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி விழா கோலாகலம்...!

திருச்செந்தூா், பழநி உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்  இன்று சூரசம்ஹாரம் வெகுவிமா்சையாக நடைபெறவுள்ளது. 

சூரபத்மனை தனது வேல் மூலம் முருகப்பெருமான் வதம் செய்த நிகழ்வு சூரசம்ஹாரம் என்று அழைக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு ஆண்டு தோறும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

திருச்செந்தூா், பழநி உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் கடந்த திங்கட்கிழமை கந்த சஷ்டி விழா வெகுவிமா்சையாக தொடங்கியது. அதனையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.  

சஷ்டி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் காப்பு கட்டி விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்காக திரளான பக்தா்கள் கோயில்களில் குவிந்துள்ளனா். பக்தா்களின் பாதுகாப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

கந்த சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூா், பழநி உள்ளிட்ட கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.