கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்: வெறும் 9 சதவீத பள்ளிகள் மட்டுமே மூடல் - தனியார் பள்ளிகள் ஸ்டிரைக் வாபஸ்!!

தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பால் அறிவிக்கப்பட்ட ஸ்ட்ரைக்கில், 987 பள்ளிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதாக தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்: வெறும் 9 சதவீத பள்ளிகள் மட்டுமே மூடல் - தனியார் பள்ளிகள்  ஸ்டிரைக் வாபஸ்!!

தனியார் பள்ளிகள் இயங்காது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து, இன்று முதல் தனியார் பள்ளிகள் எதுவும் இயங்காது என்று தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை:

ஆனால், அரசிடம் அனுமதி பெறாமல் பள்ளிகளை மூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

வழக்கம் போல் இயங்கிய பள்ளிகள்:

தமிழகத்தில் மொத்தம் உள்ள 11 ஆயிரத்து 335 தனியார் பள்ளிகளில், 10 ஆயிரத்து 348 பள்ளிகள் அதாவது 91 சதவீத பள்ளிகள் வழக்கம் போல் இயங்கியதாகவும்,  மீதமுள்ள 9 சதவீதம், அதாவது 987 பள்ளிகள் மட்டும் இயங்கவில்லை என்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி-யில் 92 சதவீத பள்ளிகள் வழக்கம் போல் இயங்கிய வருகிறது:

11 மாவட்டங்களில் 100 சதவீத தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும்,  வன்முறை நிகழ்ந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 92 சதவீத பள்ளிகள் வழக்கம்போல, இயங்கி வருவதாகவும், மிகக்குறைந்த பட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் வெறும் 32 சதவீத பள்ளிகள் மட்டுமே இயங்கியதாகவும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ஸ்டிரைக் வாபஸ்:

அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதாகவும், நாளைமுதல் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.