வேடசந்தூரில் 15 முறை நில அதிர்வு...!  ஆய்வு குழுவுக்கு அழைப்பு...!! கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்...!!!

வேடசந்தூரில் 15 முறை நில அதிர்வு...!  ஆய்வு குழுவுக்கு அழைப்பு...!! கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்...!!!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மற்றும் நத்தம் பகுதிகளில் நில அதிர்வு ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய தேசிய நிலநடுக்க மைய நிபுணர்களை அழைத்துள்ளதாகவும், அவர்கள் அளிக்கக்கூடிய அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மற்றும் நத்தம் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது குறித்து சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமசந்திரன், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் வேடசந்தூர் வட்டாரங்கள் மற்றும் இதர இடங்களில் சமீபத்தில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்த மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அறிக்கை வரப்பெற்றதாகவும், இதன் தொடர்ச்சியாக நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் இயக்குனரிடம் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து அதன் அறிக்கையினை அனுப்புமாறு கோரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், சென்னை அண்ணா பல்கலைக்கழக காலநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை மைய இயக்குனர் மற்றும் வேலூர் தொழில்நுட்ப நிறுவன காலநிலை மற்றும் பேரிடர் தணிப்பு மைய இயக்குனர் ஆகியோர்களிடம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நில அதிர்வு குறித்து ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து அதன் அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வேலூர் தொழில்நுட்ப நிறுவன காலநிலை மற்றும் பேரிடர் தணிப்பு மைய இயக்குநரால் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள சிறப்பு பேராசிரியர் நியமனம் செய்யப்பட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்றும், சென்னை அண்ணா பல்கலைக்கழக காலநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குனரால் ஆய்வு செய்ய நான்கு நபர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்ட கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

அதேபோல், கடந்த ஆண்டு மட்டும் 15 முறை நில நடுக்கம் வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக குறிப்பிட்ட அவர், தேசிய நிலநடுக்க மைய நிபுணர்களை வைத்து ஆய்வு செய்தால் தான் ஒரு முடிவுக்கு வரும் என அறிந்து நிபுணர்களை அழைத்துள்ளோம் என்றும், அவர்கள் அளிக்கக்கூடிய அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.