தி.மு.க. எம்.பி.க்கு ஜாமீன் கிடைக்குமா..? தொழிலாளி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு...

தொழிலாளி கொலை வழக்கில் ஜாமீன் கோரிய தி.மு.க. எம்.பி. ரமேஷ் மனு மீது, சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

தி.மு.க. எம்.பி.க்கு ஜாமீன் கிடைக்குமா..? தொழிலாளி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு...

கடலூரில் தி.மு.க. எம்.பி. ரமேசுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் வேலை செய்த கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க. எம்.பி. ரமேஷ், தமக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதனை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அப்போது, கோவிந்தராஜின் மகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு, இந்த வழக்கை விசாரணை அதிகாரி நியாயமாக விசாரிக்கவில்லை என்றும், பூனைக்கும் காவல், பாலுக்கும் காவல் என்ற அடிப்படையில் விசாரணை நடப்பதால் விசாரணையை சி.பி. ஐ.க்கு மாற்ற வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் தரப்பில் ஆஜரான தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் தரப்பினர் 5 பேர் மீது மட்டுமே குற்றம் சாட்டியதாகவும், ஆனால், சி.பி.சி. ஐ.டி. போலீசார் நேர்மையாக விசாரித்து 6 பேரை கைது செய்துள்ளதாகவும் வாதிட்டார். எனவே இந்த வழக்கை சி.பி. ஐ. விசாரணைக்கு மாற்ற தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார். அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்று பிறப்பிக்க உள்ளதாக உத்தரவிட்டார்.