பல்வேறு கோயில்களில் ஜப்பசி பிரதோஷம் சிறப்பு வழிபாடு...!

ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிவன் கோயில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதில் பங்கேற்று சாமி தாிசனம் செய்வதால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். 

அதன்படி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் சுவாமிக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 
தஞ்சாவூா் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்தியம் பெருமானுக்கு மஞ்சள், தேன், பால், தயிர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிக்க : தீபாவளி எதிரொலி: சிறப்பு பேருந்து நிலையங்களில் அலைமோதிய பயணிகள்...!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரில் அமைந்துள்ள விசுவநாத சுவாமி கோயிலில் சுவாமி, அம்பாள், நந்தி ஆகியோருக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி, அம்பாளுக்கு வெள்ளி கவச அலங்காரம் சாத்தப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னா் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோயிலில் சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு உள்ள நந்தியம் பெருமானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து  சுவாமிக்கு சோடசை தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் புதுச்சோி,  திருநள்ளாறில் அமைந்துள்ள சனீஸ்வர பகவான் கோயிலில் ஐப்பசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.