அலங்காநல்லுர் அருகே பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானம்…பணிகள் நாளை தொடக்கம்!

ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர் பகுதியில் அருகிலேயே அமைக்க வேண்டும் என கேட்டுகொண்டதன் படி தற்போது இந்த  மேய்ச்சல்  புறம்போக்கு இடத்தில் அரசின் 66 ஏக்கர் நிலம் உள்ளது.  இதில் முதற்கட்டமாக 16 ஏக்கர் தேவைப்படும். துறை சார்ந்த அனுமதிகள்  பெற்று பணியை தொடங்கிட , முதலமைச்சர் இந்த இடத்தை தேர்வு செய்ய கூறினார். 

அலங்காநல்லுர் அருகே பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானம்…பணிகள் நாளை தொடக்கம்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் உள்ள வகுத்துமலை அடிவாரத்தில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது.

அமைச்சர்கள் ஆய்வு

பொதுப்பணிகள் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர்,  மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் உள்ள வகுத்துமலை அடிவாரத்தில் அமையவுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்திற்கான இடத்தை பார்வையிட்டனர்.

 ஆய்வின்போது பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் விஸ்வநாதன், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் இடம் கட்டுமான உத்திகள் குறித்து விவரித்தனர்.   ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தென்னகத்தின் வீர விளையாட்டு  ஜல்லிக்கட்டு.

ஆய்வைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, தென்னக மக்கள் மனநிறைவடையும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின்  110 விதியின் கீழ் அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்து விடுவோம் என சட்டமன்றத்தில் அறிவித்தார்.  அதனடிப்படையில்  இரண்டு இடங்களைப் பார்வையிட்டோம். அதனை முதல்வரிடம் சென்று காண்பித்தோம்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர் பகுதியில் அருகிலேயே அமைக்க வேண்டும் என கேட்டுகொண்டதன் படி தற்போது இந்த  மேய்ச்சல்  புறம்போக்கு இடத்தில் அரசின் 66 ஏக்கர் நிலம் உள்ளது.  இதில் முதற்கட்டமாக 16 ஏக்கர் தேவைப்படும். துறை சார்ந்த அனுமதிகள்  பெற்று பணியை தொடங்கிட , முதலமைச்சர் இந்த இடத்தை தேர்வு செய்ய கூறினார்.  

வனப்பகுதியை அரசு கையகப்படுத்தாது

வனப்பகுதி ஒட்டிய அரசு இடமாக இருந்தாலும், எந்த சூழலிலும் வன இடத்தை அரசு கையகப்படுத்தாது. இந்த 66 ஏக்கருள்ளேயே குளம் ஒன்றும் உள்ளது . மலையில் இருந்து வரக்கூடிய தண்ணீரை பார்வையாளர்கள்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வகையில்  குளம் அமைத்து சீர் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.  

மலையில் இயற்கையாக மழை பெய்து மழைக்காலங்களில் மழை நீர் வரும். தண்ணீர் மலையிலிருந்து வரக்கூடிய தண்ணீர் தடைபடாமல் நீர் பாசனத்திற்கு செல்லும் பயன்பாட்டுக்கு , எந்த விதமான குந்தகம் ஏற்படாத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.  இதற்கான திட்டமதிப்பீடு பின்னர் அறிவிக்கபடும்  அதற்கான நில அளவை பணிகள், மண்பரிசோதனை, நிலம் சமபடுத்துதல் துறை சார்ந்த அனுமதி உள்ளிட்ட பூர்வாங்கபணிகள் நாளைமுதல் தொடங்கவுள்ளது. 2024 ஆண்டிற்க்குள் பணிகள் முடிவடைந்து ஜல்லிகட்டு மைதானம் தயாராகிவிடும் என தெரிவித்துள்ளார்.

சாலை திட்டங்கள்

மேலும் 10 ஆயிரம் கிலோமீட்டர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் நடைபெற்று வருவதாகவும் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த கிராம சாலை திட்டம்  முதல்வர் அவர்களால் தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

வாடிப்பட்டி-சிட்டம்பட்டிக்கு ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த சாலைகள் விரைந்து அமைக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், அந்த நான்கு வழிச் சாலைகளை இந்த வளாகத்துடன் இணைக்க தமிழக நெடுஞ்சாலைத்துறை மூலம் சுமார் 3.6 கிலோ மீட்டருக்கு நான்கு வழிச்சாலை அமைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  கட்டிடப் பணிகள் நிறைவுறும் நிலையில் இணைப்பு 4வழிச்சாலை பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார். 

400 கோடி ரூபாய்க்கு கணக்கு கொடுக்கவில்லை

அதிமுக ஆட்சிக்காலத்தில் குடிமரமாத்து என்ற பெயரில் 300 முதல் 400 கோடி வரை ஒதுக்கி உள்ளனர் யாரும் கணக்கு கொடுக்கவில்லை என எதிர்க்கட்சியாக இருந்த பொழுது  சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. எங்கு பணி நடந்தது என்றும் தெரியவில்லை.  குடிமராமத்து என்ற பெயர் நல்ல பெயர் தான் ஆனால் பணிகள் தான் நடக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.