“முதல் முயற்சி செய்தது எடப்பாடி அல்ல... நான் தான்....” அமைச்சர் துரைமுருகன்!!

“முதல் முயற்சி செய்தது எடப்பாடி அல்ல... நான் தான்....” அமைச்சர் துரைமுருகன்!!

கேரள அரசு அனுமதி வழங்கியதும் ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் தொடங்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேரவையில் அறிவித்துள்ளார்.

அதிமுக உறுப்பினர் ஜெயராமன் கேள்வி:

சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தின் கீழ் புதிய அணை கட்ட அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். 

அமைச்சர் துரைமுருகன் பதில்:

அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இத்திட்டத்திற்கு கேரள அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும், கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 2021ம் ஆண்டு அரசு கூடுதல் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.   மேலும் ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை செயல்படுத்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் கேரள அரசின் அனுமதி பெற்றவுடன் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

60 ஆண்டுகால கோரிக்கை:

தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், 60 ஆண்டுகால கோரிக்கை எனவும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது நேரடியாக கேரளாவுக்கே சென்று அம்மாநில முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறினார்.   மேலும் சுமூக முடிவு எட்டப்படும் போது தேர்தல் வந்து விட்டதாகவும், கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் இருக்கும் வரை மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்பதால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

முதல் முயற்சி:

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், இத்திட்டத்திற்கு முதல்முதலாக முயற்சி செய்தது நான் எனவும் இதுவரை அமைச்சர்கள், அரசு என 28 முறை பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் முதலமைச்சர் அளவில் பேசி முடிவெடுக்கப்படும் எனவும் பதிலளித்தார்.  மேலும் உறுப்பினர் பரிந்துரையின் படி ஒரு சொட்டு நீர் கூட வீணாகாத அளவில் இஸ்ரேலுக்கு சென்று அங்கு பின்பற்றப்படும் நடைமுறையை பார்த்து அதைப்போலவே இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்தார்.

இதையும் படிக்க:   விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்....அமைச்சர் பொன்முடி பதில்!!