மர்மமான முறையில் உயிரிழந்த விசாரணை கைதி ராஜசேகர்... உடலை வாங்க மறுத்த உறவினர்கள்! ஏன் தெரியுமா?

கொடுங்கையூர் விசாரணை கைதி ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சாதிப் பெயர் மாற்றித்தருவதாக காவல்துறை சார்பில் உறுதி அளித்ததின் பேரில்  உறவினர்கள் உடலைப் பெற்றுக் கொண்டனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த விசாரணை கைதி ராஜசேகர்... உடலை வாங்க மறுத்த உறவினர்கள்! ஏன் தெரியுமா?

சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்  செல்லப்பட்ட ராஜசேகர் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து, அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், அடித்துக் கொலை செய்யப்பட்டதாக ராஜசேகர் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதனால், வழக்கில் தொடர்புடைய கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் உட்பட 5 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ராஜசேகரின் உடலை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் பிரேத பரிசோதனை செய்த வீடியோ மற்றும் அறிக்கையை தங்களிடம் கொடுத்தால் மட்டுமே பெற்றுக் கொள்வோம் என உறவினர்கள் கூறியதை அடுத்து, நீதிபதி முன்பு நடைபெற்ற பிரேத பரிசோதனை வீடியோ மற்றும் அறிக்கை வழங்கப்பட்டது. 

எனினும் இறப்பு சான்றிதழில் ராஜசேகரின் சாதிப்பிரிவு மாற்றப்பட்டிருப்பதாகவும், பட்டியலினப்பிரிவு என சரியான பிரிவை மாற்றிக் கொடுத்தால் மட்டுமே உடலை வாங்குவோம் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இறப்பு சான்றிதழில் ராஜசேகரின் சாதிப்பிரிவை மாற்றித் தருவதாக காவல்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராஜசேகரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.  

இதனிடையே  விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்த வழக்கின் சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி சசிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.