சனாதன பேச்சு ஆளுநர் பதவிக்கு அழகல்ல? - ஆர்.என்.ரவிக்கு திமுக கண்டனம்

சனாதன தர்மர் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சனாதன பேச்சு ஆளுநர் பதவிக்கு அழகல்ல? - ஆர்.என்.ரவிக்கு திமுக  கண்டனம்

சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வேற்றுமையில் ஒற்றுமை என்பதைத் தான் சனாதன தர்மம் கூறுகிறது என்றும் சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கஜினி முகமது உருவாக்கிய கந்தகார், பெஷாவர் நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம் என்றும் கூறியிருந்தார்.

ஆளுநர் ரவியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. ஆளுநர் ரவியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையைக் கிழித்தெறிவது போல் ஆளுநரின் பேச்சு உள்ளதாக சாடியுள்ளார்.

அமெரிக்கக் குண்டுகளால் தகர்க்கப்பட்டதை நியாயப்படுத்தி கருத்துச் சொல்லி இருப்பது உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தும் சிந்தனை என்றும் தமிழ்நாட்டில் இத்தகைய கருத்துகளை ஆளுநர் சொல்வதன் பின்னணி பலத்த சந்தேகங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவில் சமீப காலமாகச் சீர்குலைவு சக்திகள் அதிகமாக தலை தூக்கி வருவதாகவும் அத்தகைய சக்திகளுக்கு ஆளுநரின் பேச்சு வழிகாட்டியாக இருப்பதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை வழிநடத்துவது அரசியலமைப்புச் சட்டம் தானே தவிர, சனாதன தர்மம் அல்ல என்றும் ஆளுநருக்கு நினைவூட்டுவதாக கூறியுள்ளார்.

மனிதனை நான்கு வர்ணமாகப் பிரித்து சாதி வேற்றுமையை நிலை நிறுத்திய சனாதன காலத்தின் மேல் 'பிரிட்டிஷ் ஆட்சியின் சட்டக் குண்டுகள்' வீசப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிவிட்டதை மறந்து விட்டு ஆளுநர் ரவி  இன்னும் சனாதனப் பிரமையில் இருப்பதாகவும் சாடியுள்ளார்.

மேலும் சனாதனத்துக்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் தொடர்ந்து பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளும் மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே ஆளுநர்கள் என்று குறிப்பிட்டுள்ள டிஆர்பாலு, சனாதன  கருத்தை திரும்பப் பெற்று இனி இதுபோல் பேசாமலிருக்க ஆளுநர் உறுதி எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.