முதலில் ஜே.எம்.பஷீர்... அடுத்தது அன்வர் ராஜா... தொடர்ந்து நீக்கப்படும் இஸ்லாமியர்கள் - சர்ச்சையில் அதிமுக தலைமை...

அதிமுகவிலிருந்து வரிசையாக இஸ்லாமிய பிரமுகர்களை நீக்கப்படுவது கடும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

முதலில் ஜே.எம்.பஷீர்... அடுத்தது அன்வர் ராஜா...  தொடர்ந்து நீக்கப்படும் இஸ்லாமியர்கள் - சர்ச்சையில் அதிமுக தலைமை...

அண்மையில் அதிமுக சிறுபான்மையினர் அணி நிர்வாகி ஜே.எம்.பஷீரை கட்சியிலிருந்து நீக்கிய தலைமை, இப்போது அன்வர் ராஜாவை வெளியே அனுப்பியிருக்கிறது.

அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து இரண்டு இஸ்லாமிய முக்கியப் பிரமுகர்களை நீக்கி, கடும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது அதிமுக தலைமை.  அதிமுக சிறுபான்மையினர் அணி நிர்வாகியான ஜே.எம்.பஷீரை கடந்த மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ். ஆகியோர் உறுப்பினர் ஆவதற்கு முன்பே உறுப்பினராக இணைந்த அன்வர்ராஜாவும் நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவில் சிறுபான்மையினருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது என்ற தோற்றத்தை இந்த இரு நீக்கங்கள் ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. அதிமுகவை பொறுத்தவரை விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இஸ்லாமிய பிரமுகர்கள் இருந்தனர். அதில் இப்போது முக்கியமான இருவர் கட்சியில் இல்லாததால் யாருக்கு சிறுபான்மையினர் அணியில் முக்கியப் பொறுப்பு கிடைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்வர் ராஜா மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை காரணமாக எழும் சலசலப்பை தமிழ் மகன் உசேன் மூலம் ஈடுசெய்ய முடியும் என்பது அதிமுக தலைமையின் நம்பிக்கையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அன்வர் ராஜா, ஜே,எம்.பஷீர் ஆகிய இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னணியில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகம் பங்கிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனில் நீக்கப்பட்ட இருவரும் இ.பி.எஸ். பற்றி பேசித்தான் வம்பில் மாட்டியவர்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் அன்வர் ராஜா மீதான நடவடிக்கைக்கு மிகுந்த தயக்கம் காட்டியதாகவும் கடும் அழுத்தத்திற்கு பிறகே அவர் கையெழுத்திட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.