உத்திர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு செயல்பாட்டில் இருக்கிறதா? ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

உத்திர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு செயல்பாட்டில் இருக்கிறதா? ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு செயல்பாட்டில் இருக்கிறதா என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். 

உத்திர பிரதேச மாநிலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆத்திக் அகமது, அவரது சகோதர் என‌ இருவர் தொலைக்காட்சி நேரலையில், காவலர்கள் கண் முன்னே துப்பாக்கியால் சுட்டு கொல்லப் பட்டுள்ளனர்.

இன்று செய்தியாளர்களின் சந்திப்பின்போது இச்சம்பவத்தை கண்டித்த அவர் "நாட்டிலேயே அதிர்ச்சி தரும் அளவில் எண்கவுண்டர் கொலைகள் உத்திர பிரதேச மாநிலத்தில் நடக்கிறது.‌ அங்கே துப்பாக்கி கலாச்சாரம் பெருக்கெடுத்துள்ளது. இப்போது நடந்திருக்கும் கொலைகள் அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை எடுத்துக் காட்டுகிறது. கொலை செய்துவிட்டு ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்ட கொலைகாரர்கள் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர்" எனக் கூறியுள்ளார்.

மேலும், பாஜக வளர்த்துவிட்ட என்கவுண்டர் கலாச்சாரமும், துப்பாக்கி கலாச்சாரமுமே  உத்திர பிரதேச மாநிலம் தற்போதுள்ள நிலைமைக்கு காரணமாகும் எனக்கூறியவர் சட்டம் ஒழுங்கு அங்கே செயல்பாட்டில் இருக்கிறதா என்பதையே சந்தேகத்திற்கு உள்ளாக்கிவிட்டனர் என கேள்வி எழுப்பினார்.

எனவே, அதிகரிக்கும் படுகொலைகள் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு  கோரிக்கை வைத்துள்ளார்.