பழனி முருகன் கடவுளா...? கார்ப்பரேட் நிறுவனமா...? - ஹிந்து அமைப்பினர்.

பழனி முருகன் கடவுளா...? கார்ப்பரேட் நிறுவனமா...? - ஹிந்து அமைப்பினர்.
Published on
Updated on
2 min read

பழனி கோவிலில் விரைவில் அமல்படுத்த உள்ள இடைநிறுத்த தரிசனம் அறிவிப்புக்கு  பழனி முருகன் கடவுளா? கார்ப்பரேட் நிறுவனமா என கேள்வி எழுப்பி ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மலைக் கோவிலுக்கு தமிழ்நாடு,கேரளா ,ஆந்திரா, உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் முக்கிய பிரமுகர்கள் , 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் ,கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் ஆகியோர் எளிதில் சாமி தரிசனம் செய்திட பக்தர்கள் வசதிக்காக பத்து ரூபாய் மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசன வழிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

சட்டமன்றத்தில் 2023 மற்றும் 2024 ஆண்டு அறிவிப்பு எண் 85 பக்தர்கள் பெரும் அளவில் வருகை தரும் திருக்கோவில்களில் தினசரி ஒரு மணி நேரம் இடைநிறுத்த தரிசன வசதி (பிரேக் தர்ஷன்) ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி சட்டமன்ற அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சுவாமி தரிசன செய்ய வருகை தரும் முக்கிய பிரமுகர்கள்  விரைவு தரிசனம் செய்வதற்கு தினசரி மாலை 3 மணி முதல் 4 மணி வரை கீழ்க்கண்ட விபரப்படியான தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி ,அக்னி நட்சத்திரம் ,வைகாசி விசாகம் ,கந்த சஷ்டி ,ஆங்கில வருட பிறப்பு ,தை ஒன்று முதல் ஐந்து வரை ,தைப்பூச திருவிழா, பங்குனி உத்திரம் திருவிழா ,மாதாந்திர கார்த்திகை உள்ளிட்ட 44 திருவிழா மற்றும் விசேஷ நாட்கள் தவிர்த்து பக்தர்கள் ஒருவருக்கு 300 ரூபாய் கட்டண சீட்டில் இடைநிறுத்த தரிசனம் அறிமுகம் செய்யபடவுள்ளது. 

இடைநிறுத்த தரிசனத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் ஒன்று ,தேங்காய், பழம், விபூதி, ஒரு மஞ்சள் பை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டு உள்ளது.  இந்த இடைநிறுத்த தரிசனமானது யார் யாருக்கு இந்த தரிசனம் வழங்கப்படும் என அதற்கான நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

 புதிய அறிவிப்பு குறித்து பக்தர்கள் தங்களுடைய ஆட்சேபனை மற்றும் ஆலோசனை இருப்பின் அடுத்த மாதம் 16/06/23 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக இணை ஆணையர் ,செயல் அலுவலர் ,அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ,பழனி என்ற முகவரிக்கு நேரிலோ, தபாலிலோ அனுப்பி வைக்கும் வகையில் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் திருக்கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது, 

இதன் மூலம் வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆட்சேபனையோ அல்லது ஆலோசனையோ இருப்பின், தகவல் தெரிவிக்குமாறு திருக்கோயில் அலுவலகத்தில் அறிவிப்பு பலகையில் வைக்கபட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து விஸ்வ ஹிந்து பரிசத் நிர்வாகி செந்தில் குமார் தெரிவிக்கையில் :-

" சனி ,ஞயிறு தினங்களில் சாதாரணமாக மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை இருக்கும் போது இத்திட்டம் கொண்டு வரபட்டால் மேலும் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே பொது தரிசனம செய்யும் பக்தர்கள் அன்டர் கிரௌண்ட்டில் காத்திருக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டால் கூட சிகிச்சை அளிக்கும் வகையில் வெண்டிலேட்டர் வசதி கூட இல்லாத பழனி கோவிலில் ஏற்கனவே சுமார் இதுவரை 5 பேர் இறந்து இருக்கிறார்கள் ". 

" திருப்பதியை போல பழனியை மாற்றுகிறோம் என்று கூறும் அரசு  ஏன் கேரளாவில் உள்ள  சபரிமலை கோவில் போலவும் , குருவாயூர் கோவில் போல ஏன் இலவச தரிசன திட்டத்தை கொண்டு வரவேண்டியது தானே எனவும் ,பழனி முருகன் கடவுளா ? அல்லது கார்பரேட் நிறுவனமா "  என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், இத்திட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com