பாலைவனமாக மாறுகிறதா பவானி பாசனப்பரப்பு?

இந்தியாவின் 2-வது மிகப்பெரிய அணை என்ற பெருமை பெற்றது பவானி சாகர் அணை. 32.8 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையின் முழு கொள்ளளவு 120 அடியாக இருந்தாலும், சேறு, சகதி கழித்து, 105 அடியாக கணக்கில் எடுக்கப்படுகிறது.  இந்த அணையின் வாய்க்கால்கள் மூலம் 2 லட்சத்து, 7 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

ஈரோட்டில் உள்ள அனைத்து விளைநிலங்களுக்கும் பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் பிரித்து அனுப்பப்படும் நிலையில், தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பாசன பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. ஏன் என்று விசாரிக்க களம் இறங்கினால் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவருகின்றன. 

பவானிசாகரில் இருந்து பவானி வரை சுமார் 46  தனியார் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. கரும்பு சர்க்கரை ஆலை, கரும்புக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் ஆலை என விவசாயத்துடன் தொடர்புடைய தனியார் ஆலைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. 

இந்த ஆலைகள், "புதிய நீர் ஏற்று பாசன சங்கம்" என்ற பெயரில் விவசாயக் குழுக்களாக தங்களை பதிவு செய்து கொண்டு,  ஆயக்கட்டு மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து அனுப்பப்படும்  நீரை முறைகேடாக, மிகப் பெரிய மோட்டார் மூலம் உறிஞ்சி, தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றன.  

பொதுவாக விவசாயத்திற்கு வழங்கப்படும் நீர், 15 நாட்கள், ஒரு மாதம் என முறை வைத்து வழங்கப்படுவதும், குடிநீருக்காக வழங்கப்படும் நீர் ஆண்டு முழுவதும் வழங்கப்படுவதும் வழக்கம்.  ஆனால், இந்த விவசாய குழுக்கள் என்ற பெயரில், இந்த தனியார் ஆலைகள் ஒரு நாள் தவறாமல், ஆண்டு முழுவதும் தண்ணீரை உறிஞ்சுகின்றன. 

இதனால், தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பாசன பகுதிகளுக்கு நீர் இன்றி, பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சட்ட விரோத தண்ணீர்  திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இந்த நீரானது  குடிநீருக்கும், உரிமை பெற்ற ஆயக்கட்டுகளுக்கும் மட்டுமே சொந்தம் என்றும் தீர்ப்பு வழங்கியது.  

ஆனால் தீர்ப்பு வழங்கப்பட்டும், அதிகாரிகள் துணையுடன், தண்ணீர் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். 

விவசாயிகள் என்ற பெயரில் இயங்கும் ஆலைகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, ஆலைகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்து, சாலை வழி அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.  

நீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்தி, தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளாக  விவசாயிகள், போராடி வருகின்றனர். ஆனால், இதுவரை மாவட்ட நிர்வாகமோ, தமிழ்நாடு அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

டெல்டா மாவட்டங்களில் உரிய நீர் இன்றி குறுவைப் பயிர்கள் கருகி வரும் நிலையில், இது போன்ற சட்டவிரோத நீர் திருட்டுகளால், பவானிசாகர் பாசன நிலங்கள் பாலைவனமாக மாறும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. நீர் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா...?  பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிக்க: பகையால் நேர்ந்த விபரீதம்...குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!