விவசாயி உண்ணாவிரதம்..! தனியார் கல்குவாரிக்கு இடைக்கால தடை..!

பல்லடம் அருகே தனியார் கல்குவாரிக்கு இடைக்கால தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

விவசாயி உண்ணாவிரதம்..! தனியார் கல்குவாரிக்கு இடைக்கால தடை..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொத்துமுட்டிபாளையம் பகுதியில் விவசாயி விஜயகுமார் என்பவரது நிலத்தின் அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. கல்குவாரியினால் சுற்றுச்சூழல் மாசுபட்டு விவசாயம், கால்நடைகள் வளர்ப்பு, விசைத்தறி தொழில்கள் பாதிக்கப்படுவதாகவும், அதனால்  கல்குவாரி இயங்க தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் விவசாயி விஜயகுமார் கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து இருந்தார். 

இதுகுறித்து மாவட்ட கனிமவளத்துறை, சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை, காவல்துறையினர் ஆகியோர் மூன்று கட்டங்களாக, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த விவசாயி விஜயகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் விஜயகுமாரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், சமூக ஆர்வலர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வந்தன.

 இதனையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் கல்குவாரிக்கு சென்ற அதிகாரிகள் குழுவினர், அளவீடு செய்தும், ஆய்வு செய்தும் அதன் அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில் பத்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வரும் விவசாயி விஜயகுமாரின் உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினர் பரிசோதித்து, அதன் அறிக்கையும் மாவட்ட ஆட்சியரிடம் அளித்திருந்தனர். பத்தாவது நாளான நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட கல்குவாரி இயங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். 

அதனை ஏற்க மறுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு கிடைத்தால் மட்டுமே உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவோம் என விஜயகுமார் தரப்பினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கல்குவாரிக்கு செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவு நகலை பல்லடம் வட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி விஜயகுமாரிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து தனது உண்ணாவிரத போராட்டத்தை விஜயகுமார் முடித்துக் கொள்வதாக தெரிவித்தார்.