காவிரி டெல்டா பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம் - முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு

நாகை அருகே வடிகால் தூர்வாரும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காவிரி டெல்டா பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம் - முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு

காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், கடலூா், புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், திருச்சி உள்பட 10 மாவட்டங்களில், சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதனிடையே, காவிரி நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மேட்டூா் அணை நிரம்பியது. இதனால், குறுவை நெல் சாகுபடிக்காக முன்னெப்போதும் இல்லாதவகையில், மே 24 ஆம் தேதியே மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

இதையொட்டி, ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகள் அனைத்தும் உடனடியாக நிறைவடைய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டாா். இதையடுத்து, காவிரி கடைமடை மாவட்டங்களில் நீா்நிலைகளை தூா்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

அந்தவகையில், வேளாங்கண்ணியை அடுத்த கருவேலங்கடையில் உள்ள கல்லார் வடிகாலில் 15  லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  நடைபெற்று வரும் தூா்வாரும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, கருவேலங்கடை, பாப்பாக்கோவில்  கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு, மின்கல தெளிப்பான், கைத்தெளிப்பான், தார்ப்பாய், உளுந்து, தென்னங்கன்றுகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.