"இந்தியான்னா ஏதோ வடக்கே இருக்கிற ஊரு. நம்ம ஊரு தமிழ்நாடுதான்" ஸ்மிருதி இராணிக்கு எ.வ.வேலு விளக்கம்! 

"இந்தியான்னா ஏதோ வடக்கே இருக்கிற ஊரு. நம்ம ஊரு தமிழ்நாடுதான்" ஸ்மிருதி இராணிக்கு எ.வ.வேலு விளக்கம்! 

மக்களவையில்  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி “இந்தியா என்றால் வடஇந்தியாதான் என்று தமிழ்நாட்டில் தி.மு.க. அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். இதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவிப்பாரா?”  என கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் எவ வேலு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மக்களவையில் மத்திய மணிப்பூர் விவகாரத்தை ஒட்டி மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. இந்த விவாதத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி “இந்தியா என்றால் வடஇந்தியாதான் என்று தமிழ்நாட்டில் தி.மு.க. அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். இதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவிப்பாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இதனை கண்டிக்கும் விதமாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், "ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மணிப்பூர் பற்றி பதில் சொல்லத் திறனின்றி தமிழ்நாட்டையும் தி.மு.க.வையும் நாடாளுமன்றத்தில் விமர்சித்திருக்கிறார். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்குப் பொறுப்பு வகிக்கும் அரைவேக்காடுகள் போலவே ஒன்றிய அமைச்சர்கள் பேசுவது ஆச்சரியமளித்த நிலையில், நாட்டை ஆளக்கூடிய உயர்ந்த பொறுப்பில் 9 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களும் அதே வழியில் அவதூறான முறையில் நாடாளுமன்றத்தில் பேசியது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும், "அண்மையில் பேராசிரியர் சுப.வீ அவர்களின் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பிலான நிகழ்வில் நான் கலந்து கொண்டு பேசியதைத்தான் பிரதமரும் ஒன்றிய அமைச்சர்களும் திரித்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிகழ்வில், திராவிட இயக்கத்தின் கொள்கை வலிமையை எடுத்துக்கூறி, அந்த வழியில்தான் திராவிட மாடல் அரசை மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் சிறப்பாக நடத்தி வருகிறார் என்பதை எடுத்துக்கூறி உரையாற்றினேன்.

முன்பு இருந்த நிலை என்ன, இப்போதுள்ள நிலை என்ன என்பதை விளக்கும்போது, “ஒரு காலத்தில் இந்தியா என்ற வார்த்தையில்கூட நமக்கு பெரிய தாக்கம் இருந்தது கிடையாதே! நான் சொல்வது ஒரு காலத்தில். இந்தியான்னா ஏதோ வடக்கே இருக்கிற ஊரு. நம்ம ஊரு தமிழ்நாடுதான். முடிந்தால் இதைத் திராவிடநாடாக்க முடியுமா என்று யோசிப்போம்” என்று முன்பிருந்த பழைய நிலைமையினைச் சுட்டிக்காட்டினேன்" தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, "வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது" என்ற அண்ணாவின் முழக்கம் உண்மையாக இருந்தது. அதனால்தான் மாநில சுயாட்சியைக் கோரினோம். மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அதன் காரணமாக, அன்றைக்கு இருந்த நிலைமை மாறி, திராவிட நாடு என்ற சிந்தனையைக் கைவிட்டு, திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலமாக உயர்ந்து நிற்கிறது. ஒன்றுபட்ட - ஒருமைப்பாடு கொண்ட - பன்முகத்தன்மையுடன் மாநில உரிமைகளை மதிக்கும் இந்தியாவை மீட்டெடுக்க வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் காலத்திலும், அதனைத் தொடர்ந்து இன்றைய முதலமைச்சர், கழகத் தலைவர் தலைமையிலும் தொடர்ந்து பாடுபடுகிறோம். இந்தியாவின் ஜனநாயகத்திற்கு நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் துணை நின்று மீட்டெடுத்த இயக்கம் தி.மு.க. என்பதை நாடறியும் எனக் கூறியுள்ளார்.

நான் பேசியதை முழுமையாக அறியாத அரைவேக்காடுகள் அதனைக் காதில் வாங்காமல், கவனம் செலுத்தாமல் அரசியல் விளம்பரத்திற்காக எதையோ செய்துவிட்டுப் போகட்டும் என தெரிவித்துள்ள அவர்  பிரதமர் கூடவா முழுமையாக எதையும் தெரிந்துகொள்ளாமல் இத்தனை காலம் ஆட்சி நடத்தியிருக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் மணிப்பூர் என்ற வார்த்தையை உச்சரித்ததைவிட, தி.மு.க, தமிழ்நாடு என்று உச்சரித்ததுதான் அதிகம் எனக் குறிப்பிட்டுள்ள அவர்,  தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. ஒரு மாநிலக் கட்சியாக இருந்தாலும், அதுதான் இந்தியாவில் உள்ள மாநிலங்களை எல்லாம் இணைக்கின்ற, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற கட்சி  என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:அதிகாலையில் பணிக்கு சென்ற இளைஞர்...மழைநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு!!