"இந்தியா இனிமேல் வளர்ந்து வரும் நாடு அல்ல; வளர்ந்த நாடு" தமிழிசை பெருமிதம்!

"இந்தியா இனிமேல் வளர்ந்து வரும் நாடு அல்ல; வளர்ந்த நாடு" தமிழிசை பெருமிதம்!

சந்திரனுக்கு தற்போது வெற்றிகரமாக சென்றுள்ளோம் என்பதை விட இந்தியா தற்போது சூரியனை நோக்கி செல்ல உள்ளது. இந்தியா இனிமேல் வளர்ந்து வரும் நாடு அல்ல வளர்ந்த நாடு என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

வள்ளலார் பிறந்தநாளையொட்டி சென்னை, பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில்  நடைபெறும் வள்ளலார் பிறந்தநாள் மற்றும் பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தெலங்கானா ஆளுநர், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், உலகிலேயே நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை நிறுவிய முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. நிலவை வணக்கத்துக்குரிய ஒரு கோளாக நாம் பார்த்து வருகிறோம். வேறு நாடுகளில் இது கிடையாது. தஞ்சையில் சந்திரனுக்கென்று கோயில் உள்ளது. நவகிரகத்தில் சந்திரனுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதனால்தான் தென் துருவத்தில் ரஷ்யாவை அனுமதிக்காத நிலவு இந்தியாவை அனுமதித்துள்ளது. உலகில் பல நாடுகள் விஞ்ஞான பெருமிதம் பேசிய காலத்தில் இவையெல்லாம் நடக்கிறதென்றால் இந்த புண்ணிய பூமி. இங்கு ஒரு குறிக்கோளை முன்னெடுப்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்.  

சந்திரனுக்கு வெற்றிகரமாக சென்றுள்ளோம் என்பதை விட இந்தியா தற்போது சூரியனை நோக்கி செல்ல உள்ளது. இந்தியா இனிமேல் வளர்ந்து வரும் நாடு அல்ல வளர்ந்த நாடு எனக் கூறினார். 

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், சந்திரனில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடத்திற்கு பிரதமர் மோடி சிவ சக்தி பெயரிட்டார்.  சிவ சக்தி என்பது சக்தியின் வடிவம். அனைவரிடமும் சக்தி உள்ளது. இந்து மதத்தினரிடம் சார்ந்தது இல்லை. சிவ சக்தி உலகை இயக்கி  கொண்டிருக்கிறது என நம்புகிறோம் எனக் கூறினார். 

இந்து மத கோயில்களில் உண்டியலில் அளிக்கும் பணத்தை யாரும் கோவில்களுக்கு பயன்படுத்துவது இல்லை. அப்போது யாரும் அதுபற்றி கேட்பதில்லை என தெரிவித்த அவர், சிவசக்தி  என பெயரிட்டதை நான் மதம் சார்ந்ததாக பார்க்கவில்லை. கருத்து சார்ந்ததாக பார்க்கிறேன். சிவனும் சக்தியும் இந்த உலகில் சக்தி வாய்ந்தது. மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்கு மற்ற மதத்தைச் சார்ந்தவர்களை பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் என தெரிவித்தார். மேலும் அனைவரும் அதனை மகிச்சியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இறைவன் இல்லை என்று கூறுபவர்களும், பிரதமர் எது கூறினாலும் தவறு சொல்பவர்கள்தான் விமர்சிக்கின்றனர் எனக் கூறினார். 

இதையும் படிக்க: காவிரி விவகாரம்: "திமுக நாடகமாடுகிறது" எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!