"நெரிசல் இல்லாத சென்னை வேண்டுமானால், நிலவில் தான் சென்னையை வைக்க வேண்டும்" !

"நெரிசல் இல்லாத சென்னை வேண்டுமானால், நிலவில் தான் சென்னையை வைக்க வேண்டும்" !

போக்குவரத்து நெரிசல் இல்லாத சென்னை வேண்டுமானால், நிலவில் தான் சென்னையை வைக்க வேண்டும்  என கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தை இடமாற்றம் செய்ய இருப்பதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தகவல் தெரிவித்திருந்தது. இதனை கண்டித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் மார்க்கெட்டை இடம் மாற்றம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்து கோயம்பேட்டில் உள்ள வியாபாரிகளிடம் கையெழுத்து வாங்கி வருகின்றனர். அனைத்து வியாபாரிகளிடமும் கையெழுத்து பெற்ற பிறகு அரசிடம் ஒப்படைக்க உள்ளனர்

இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், 25 வருடமாக இயங்கி வரும் கோயம்பேடு வணிக வளாகத்தில் 5000 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கடைகளும், 15000க்கும் மேற்பட்ட வணிகர்கள், உட்பட லட்சக்கணக்கான வணிகர்களின் வாழ்வாதாரம் இங்கு உள்ளது. போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி  மார்க்கெட்டை இடம் மாற்றம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. போக்குவரத்து நெரிசல் இல்லாத சென்னை வேண்டுமானால் நிலவில் தான் சென்னையை வைக்க வேண்டும்.

சிறு வணிகர்கள் அழிக்கப்பட்டு லூலு மார்க்கெட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு சாதகமாக இயங்கி வருகிறது என தெரிவித்த அவர், பல குடும்பங்களின் வாழ்வாதாரம் கோயம்பேடு மார்க்கெட்டை நம்பி உள்ள நிலையில் முதலமைச்சர் இன்னும் வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். 15 நாட்களில் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வணிகர்களிடமும் கையெழுத்து வாங்க உள்ளோம். அதற்குள் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை அனைத்து வணிகர் சங்கங்களும் கையில் எடுப்போம் என தெரிவித்தார்.

கோயம்பேடு மார்க்கெட் அரசாங்கத்திற்கு சொந்தமானது அல்ல என தெரிவித்த அவர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நிர்வகிக்கப்படுவதாகவும் அனைத்து வணிகர்களிடமும் பணம் வசூலிக்கப்பட்டு தான் மார்க்கெட் கட்டப்பட்டது என்றார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கோயம்பேடு மார்க்கெட்டை ஒழுங்கான முறையில் சுத்தப்படுத்தி சுகாதாரப்படுத்தினாலே போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒழுங்காக பராமரிக்கப்படாததே உண்மை என்றார். இவற்றை எல்லாம் செய்யாமல் கோயம்பேடு மார்க்கெட்டால்தான் சென்னையில்  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று கூறுபவர்கள் அடிமுட்டாளாக தான் இருப்பார்கள் என தெரிவித்தார்.

இதையும் படிக்க|| தாம்பரம் ஆணையரை எதிர்த்து முழக்கம்!