தமிழ்நாடு நாள் விழாவில் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாடு நாள் விழாவில் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால் இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலேயே போயிருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நாள் என்றால் என்ன:
தமிழருக்கென்று தனித்தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாள் தான் தமிழ்நாடு நாளாகும். ஆனால் தமிழ்நாடு என்பது முதலில் சென்னை மாநிலமாக தான் இருந்தது.

தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கு காரணம்:

சென்னை மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்து முதல்வராக அறிஞர் அண்ணா பொறுப்பேற்றபிறகு,  1968 ஆம் ஆண்டு ஜூலை  18 ஆம் தேதி  சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு எனப்பெயர் மாற்ற சென்னை மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இருப்பினும்  இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 தைப் பொங்கலன்று தான் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது. 

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்:

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு திருநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பங்கேற்று சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் துரை முருகன், தங்கம் தென்னரசு, எம். பி. சாமிநாதன், தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் மகேசன் காசிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு பெயர் குறித்து முதலமைச்சர் பெருமிதம்:

இந்நிகழ்ச்சியில் பேருரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால் இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலேயே போயிருக்கும் என குறிப்பிட்டார்.