"நடிகர்கள் போராடினால் திரையரங்குகள் அவர்களுக்கு கிடைக்காது" - சீமான்!

மாநில அரசுகளின் வாக்கு வங்கிக்காகவே தேசிய கட்சிகள் காவிரி விவகாரத்தில் அரசியல் செய்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் எதிரில் காவேரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கான நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளை பெற்று தராமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசு மற்றும் திமுக அரசை  கண்டித்தும், நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி நீர் என்பது விவசாயிகளுக்கு உயிர் ஆதாரமாக உள்ளது எனவும், ஒவ்வொரு வருடமும் காவிரி நீர் வழங்குவதில் பிரச்னை ஏற்படுகிறது என்றும் கூறினார். காவிரி விவகாரத்தில் பிரதமருக்கே அக்கறையில்லை என குற்றச்சாட்டினார். 

இதையும் படிக்க : இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் வரலாறு...30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மோதல்!

தமிழ்நாட்டில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு தாங்கள் பார்த்துக் கொடுத்தால் தான் சீட்டு என விமர்சித்த சீமான், உச்சநீதிமன்றம் தண்ணீர் கொடுக்க உத்தரவிட்டாலும் அதனை கர்நாடக அரசு கொடுக்க மறுக்கிறது எனவும் சாடினார். காவரி நீரை பெறுவதில் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சீமான் காட்டமாக தெரிவித்தார். 

தமிழகத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் திமுக வசமே உள்ளது என சாடினார். மேலும், தற்போதுள்ள தமிழ் நடிகர்களுக்கெல்லாம் போராட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது எனவும், ஆனால் போராடினால் திரையரங்குகள் அவர்களுக்கு கிடைக்காது எனவும் தெரிவித்தார்.