அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கையை எடுக்கும்படி எடப்பாடி நகராட்சி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையை சுற்றி ஆக்கிரமிப்புகள் உள்ளதாக கூறி, அவற்றை அகற்றக் கோரி மேட்டு அக்ரஹாரத்தை சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், காவல் துறை ஆகியவற்றிடம் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்துள்ளார்.

அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிய அதிகாரிகள் பின்னர் தயங்கியதாகவும், ஆக்கிரமிப்புகளால் மருத்துவமனைக்கு வந்துசெல்வோருக்கு அசௌகரியமும், மன உளைச்சலும் ஏற்படுவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அவற்றின் விவரங்கள் எடப்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரிக்கும், எடப்பாடி நகராட்சி ஆணையருக்கும் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மருத்துவமனையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் மீது சட்டத்திற்குட்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும்படி எடப்பாடி நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு, ஏ.ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க: சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு கிர்த்தி சுரேஷ், அனிருத் பாராட்டு!