மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அகற்ற வேண்டும்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு....!!

மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அகற்ற வேண்டும்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு....!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூர் கிராமத்தில், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல்களை ஓடை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்வதால், அருந்ததியர் சமுதாயத்தினருக்காக மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்கக்கோரி, அந்த ஓடைக்கு அருகில் நிலம் வைத்துள்ள  கலைச்செல்வி, மாலா ராஜாராம் ஆகியோர் சார்பில் பொது அதிகாரம் படைத்த நபரான கோகுல கண்ணன் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, அருந்ததியருக்கு மயானம் அமைக்க, தகுதியான நிலத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக,  அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாதி வேறுபாடின்றி அனைவருக்கும்  பொதுவான இடத்தை மயானத்திற்காக  கண்டறிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து குடிமக்களும் இந்த பொது மயானங்களை பயன்படுத்த உரிமையுள்ளது என்றும் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார். விதிகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.