சென்னையில் கொட்டித் தீர்த்த  பேய்மழை... மழை நீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல்...

சென்னையில் பல மணி நேரம் கொட்டித்தீர்த்த திடீர் மழையால் வெள்ளம் சூழ்ந்து கடும் போக்குநெரிசல் ஏற்பட்டது. 

சென்னையில் கொட்டித் தீர்த்த  பேய்மழை... மழை நீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல்...

சென்னையில் நேற்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்தது.  அண்ணா சாலை, தி.நகர், மெரினா கடற்கரை, எம்.ஆர்.சி நகர், உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் பல மணி நேரமாக மழை பெய்ததால், சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஒட்டிகள் அவதியுற்றனர்.  திடீரென பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் முழுவதுமாக நனைந்தபடி, சென்றனர். மழையால் சில இடங்களில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. ஏற்கனவே தேங்கிய மழைநீரால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில், சிக்னல் பிரச்சினையாலும் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். வாகன ஓட்டிகள் சாலைகளில் தத்தளித்தப்படி ஊர்ந்து சென்றனர்.

சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். பெரிய மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 7 ஆண்டுகளை விட இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் அதிகபட்ச மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.