மழை நீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்த மாநகராட்சி மேயர்...!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், சேலையூர், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்தது. இதையடுத்து சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் தாம்பரத்தில் மார்க்கெட் பகுதி மற்றும் ரயில்வே சுரங்கப்பாதையில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் மழை நீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்து, தேங்கியிருந்த மழை நீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். 

இதையும் படிக்க : சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை...இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நாட்றம்பள்ளி, ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை முதல் கன மழை பெய்தது.  இதையடுத்து ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில்  வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.