பழைய பரோட்டாக்களை சூடுபடுத்தி விற்பனை... ஃபிரிட்ஜில் வைத்து விற்றது அம்பலம்...

திருநெல்வேலியில் விற்பனை ஆகாத பரோட்டாக்களை குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து மீண்டும் அதனை விற்பனைக்கு பயன்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

பழைய பரோட்டாக்களை சூடுபடுத்தி விற்பனை... ஃபிரிட்ஜில் வைத்து விற்றது அம்பலம்...

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், உணவு விடுதிகள், சிற்றுண்டி ஆகிய இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என பரிசோதிக்க உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதனிடையே விற்பனையாகாத பரோட்டாக்களை குளிர்சாதனை பெட்டிக்குள் வைத்து, அதனை அடுத்த நாள் தண்ணீரில் நனைத்து சூடு செய்து விற்பனைக்கு வைக்கும் காட்சிகள், சமூக வளைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பரோட்டாக் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கடையில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோ பரோட்டா, மேலப்பாளையத்தில் ஒரு கடையில் 10 கிலோ பரோட்டா என சுமார் 50 கிலோவுக்கும் அதிகமான பரோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் வேதிப் பொருட்கள் கலந்த அஜினோமோட்டா மற்றும் கலர் பொடிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், மக்களுக்கு தீங்கு விளைக்கும் வகையில் பழைய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.