கர்ப்பிணிகள் உதவி தொகை: அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு சுகாதாரத்துறை விளக்கம்!

கர்ப்பிணிகள் உதவி தொகை: அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு சுகாதாரத்துறை விளக்கம்!

கர்ப்பிணிகள் உதவித்தொகையில் ஊழல் நடப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்ததற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2 ஆண்டுகளாக கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை  தி.மு.க. அரசு முடக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவ்வறிக்கையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கியும் அது பயனாளர்களுக்கு வழங்கப்பட வில்லை எனவும், இத்திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாகவும் அவ்வறிக்கையில் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், மகப்பேறு பெண்களுக்கு உதவும் வகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் டாக்டர் முத்து லெட்சுமி மகப்பேறு உதவி தொகை திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் பின்னர், இத்திட்டம் 2011- ஆம் ஆண்டு 12,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு, தற்போது 18,000 ரூபாயாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் 2017 ஆம் ஆண்டு இணைந்துக்கொண்ட மத்திய அரசின் திட்டமான 'மாத்ரு வந்தனா யோஜனா' மூலம் பயனாளிகளின் கணக்கில் செலுத்தப்படும் 14,000 ரூபாயில் 3000 ரூபாய் மட்டுமே மத்திய அரசால் வழங்கப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தற்போது மகப்பேறு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முடக்கத்திற்கு காரணம் மத்திய அரசின் 'மாத்ரு வந்தனா யோஜனா' மேம்படுத்தப்பட்டு 2.0 ஆக மாற்றப்பட்டதில் தமிழ்நாடு அரசு முத்து லெட்சுமி ரெட்டி திட்டத்தின் மூலமாக பெறப்படும் தகவல்களை மத்திய அரசின் செயலிகளில் நேரடியாக செலுத்த முடியாததே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இப்பிரச்சனையை தீர்க்க தமிழ்நாடு அரசு அதிகாரிகள் டெல்லி சென்று மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் படிக்க:வங்கிகள் தனியார் மயம்; "அரசு வங்கிகள் திட்டமிட்டே முடக்கப்படுகின்றன" வங்கி ஊழியர் சம்மேளனம்!