கழிவறையையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்... வைரலாகும் வீடியோ...

நாகையில் ஆதி திராவிடர் நலபள்ளியில் தூய்மை பணியாளர்கள் இல்லாததால் கழிவறையை தலைமையாசிரியரே தூய்மை செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளது. 

கழிவறையையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்... வைரலாகும் வீடியோ...

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கடந்த 1ஆம் தேதி அன்று 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. தீவிர கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடனும், கட்டுப்பாடுகளுடனும் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நாகப்பட்டினம் அடுத்துள்ள பாலையூர் ஒன்றியம் அழிஞ்சமங்கலம் பகுதியில் நூற்றாண்டுகள் கடந்த ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியும் கடந்த 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி திறக்கப்பட்டாலும் இங்கு தேவையான சுகாதாரப் பணியாளர்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தப் பள்ளியில் தலைமையாசிரியராக வீரப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். பள்ளிகள் திறக்கப்பட்டும் சுகாதாரப்பணியாளர்கள் வராத காரணத்தினால், எக்காரணம் கொண்டும் மாணவர்களின் நலன் பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்த தலைமையாசிரியர், தானே களத்தில் இறங்கினார். 

பள்ளிக் கழிவறையை தானே சுத்தம் செய்வதென முடிவெடுத்த அவர், அதனை உடனே செயல்படுத்தினார். பேருக்காக ஒரு நாள் மட்டும் செய்யவில்லை அவர். பள்ளித் திறந்த நாள் முதல் தினமும் கழிவறையை தானே சுத்தம் செய்து வருகிறார். தங்கள் பள்ளி தலைமையாசிரியன் அர்ப்பணிப்பு உணர்வை கண்ட பள்ளி மாணவர்கள், அச்செயலை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். 
தற்போது இந்த வீடியோ பதிவு வைரலாக பரவி வருகிறது. தலைமையாசிரியரின் இச்செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளின் நிலை இதுதான் என்றும், அரசு உடனடியாக இதற்கான நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வருகின்றன.