"மாணவர்களின் இறப்பை கொச்சைப்படுத்துகிறார் ஆளுநர்" உதயநிதி குற்றசாட்டு!

"மாணவர்களின் இறப்பை கொச்சைப்படுத்துகிறார் ஆளுநர்" உதயநிதி குற்றசாட்டு!

ஆளுநர் ஆர் என் ரவி மாணவர்களின் இறப்பை கொச்சைப்படுத்துவதாக அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் ஆர் என் ரவி மாணவர்களின் இறப்பை கொச்சைப்படுத்துவதாக குற்றசாட்டை முன்வைத்தார். இதுத் தொடர்பாக அவர் பேசுகையில், நீட் தேர்வில் மாணவர் உயிரிழப்பு வருந்தக்கூடிய ஒரு விஷயம் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி மாணவர் விக்னேஷ்வரன் தோல்வி அடைந்திருக்கிறார். இன்று அவருடைய தந்தையும் தற்கொலை செய்து உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது என தெரிவித்தார்.

பாஜக அரசு எதை மனதில் கொண்டு மாணவர்களுடைய வாழ்க்கையில் விளையாண்டு கொண்டிருக்கிறார்கள் என கேள்வி எழுப்பிய அவர், ஆரம்பத்தில் இருந்து நாம் சொல்லிக் கொண்டிருப்பது நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பது தான் எனவும் சட்டசபையில் இரண்டு முறை இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பி இருக்கிறோம்  எனவும் தெரிவித்தார்.  

தொடர்ந்து, மாணவர்களுடைய மனநிலையை புரிந்து கொள்ளாமல் ஆளுநர் ஒரு தனி உலகத்தில் இருந்து வருகிறார் என குற்றம் சாட்டிய உதயநிதி, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப் போராட்டம் தொடரும் எனவும் மாணவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும்  முதல்வர் இதற்கான நடவடிக்கையை எடுப்பார் எனவும் தெரிவித்தார்.  மேலும், அதுவரையும்  எந்தவிதமான தவறான நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாட்டு மக்களினுடைய மனநிலையை புரிந்து கொள்ளாமல் ஆளுநர் பேசி வருவதாக குற்றம் சாட்டிய உதயநிதி, இது மாணவர்களின் கல்விப் பசியை புரிந்து கொள்ளாமல் அதை கொச்சைப்படுத்தும் விதமாகவே நான் கருதுகிறேன் எனவும் சாடியுள்ளார்.

இதையும் படிக்க:"மசோதாவில் கையொப்பமிட ஆளுநருக்கு அதிகாரமில்லை" ப.சிதம்பரம் கருத்து!