தமிழக அரசின் கோரிக்கை குறித்து ஆலோசனை..? இன்று பிரதமரை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்...

டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து, நீட் தேர்வு விலக்கு, மேகதாது பிரச்சினை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைப்பார் எனத் தெரிகிறது.

தமிழக அரசின் கோரிக்கை குறித்து ஆலோசனை..? இன்று பிரதமரை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்...
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக பிரதமர் மோடியை சந்திக்க, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திட்டமிட்டுள்ளார். இதற்காக நேற்று இரவு 9.50 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.  இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசும் ஆளுனர், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கொரோனா தடுப்புக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமருடன் ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.
 
இந்த சந்திப்பின்போது, நீட் தேர்வு விலக்கு, மேகதாது அணை மற்றும் 7 பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக அரசின் கோரிக்கைகளை, பிரதமரிடம் எடுத்துரைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. புதிய ஆட்சியின் முதல் சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர், வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும்; தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால், எண்ணிக்கையை உயர்த்தி வழங்க வேண்டும்; தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்பன உள்ளிட்ட சில முக்கிய அம்சங்கள் குறித்து பேசியிருந்தார். அவை குறித்தும் பிரதமர் மோடியிடம் அவர் ஆலோசனை செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.