வடகிழக்கு பருவமழை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசின் "மழை இல்லம்"

மழை நீர் சேமிப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரிய தலைமை அலுவலகத்தில், மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு மாதிரிகள் புதுப்பிக்கப்பட்டு, மழை இல்லம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசின் "மழை இல்லம்"

வடக்கிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. அதில் ஒரு பகுதியாக, மழை நீர் சேமிப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரிய தலைமை அலுவலகத்தில், மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு மாதிரிகள் புதுப்பிக்கப்பட்டு, மழை இல்லம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னை காமராஜர் சாலை, எழிலகம் வளாகத்தை ஒட்டி குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தை ஒட்டி, பல்வேறு அரசு துறைகளின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக, மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், இந்த அலுவலகம் எதிரே,சாலையை கடந்து செல்கின்றனர். எனவே, மழை நீர் சேமிப்பு தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடிநீர் வாரிய வளாகத்தில் பல்வேறு மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் தொடர்பான, மாதிரி செயல் விளக்கங்கள் வைக்கப்பட்டுள்ளது.

மழை இல்லம் நீரை குறிக்கும் வகையில் நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி "எதிர்கால நீர்வளத்தை பாதுகாக்கும் அரிய முதலீடு மழை நீர் சேமிப்பு " உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களும் எழுதப்பட்டுள்ளது...மேலும், மழை நீரை வீட்டில் எவ்வாறு சேமிக்க வேண்டும், அதன் பயன்கள் என்ன? மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறை, கசிவு நீர் குழிகள் / துளையுடன் கூடிய கசிவு நீர் குழிகள் முறை, குழாய் கிணறு மூலம் மழை நீர் சேமிக்கும் முறையை விளக்கும் வகையில் படங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த மழை இல்லம், விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. அவ்வாறு திறக்கக்கூடிய பட்சத்தில், மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் பலரும் இதை அறிந்து தங்கள் வீடுகளில் மழை நீரை சேமிக்க ஏதுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.