அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு..இளைஞர்கள் அட்டகாசம்..பொதுமக்கள் பீதி

மதுரையில் தேவர் சிலை முன்பு அரசு பேருந்தின் கண்ணாடியை இளைஞர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு..இளைஞர்கள் அட்டகாசம்..பொதுமக்கள் பீதி

தமிழகம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 வது குருபூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சியில் மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்திருக்கும் தேவரின் திரு உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர், பொதுமக்கள் மாலை அணிவித்தும் பால்குடம் எடுத்தும்  அமைதியான முறையில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தேவர் சிலைக்கு மரியாதை செய்ய வந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாட்டுத்தாவணியிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அரசு  பேருந்துகள் மீது ஏறி அனைத்து இளைஞர்களும் நடனம் ஆடத் தொடங்கினர்.

பின்பு கோரிப்பாளையத்தில் இருந்து மாட்டுத்தாவணிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது கற்களை வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் பேருந்து ஓட்டுநர் மீது லேசான காயம் ஏற்பட்டது. அதேபோல் பயணிகள் மீது லேசான காயங்கள் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார் அனைத்து இளைஞர்களையும் அங்கிருந்து விரட்டியடித்தனர்.  இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அரசு பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை இயக்க மறுத்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், போலீசார்  பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தை அனுப்பி வைத்தனர்.

அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும், அரசு பேருந்தின் கண்ணாடியை இளைஞர்கள் உடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்