அரசு பள்ளி இடித்து தரைமட்டம் - பொதுமக்கள் ஆவேசம்...

ஒசூரில் உள்ள அரசுப்பள்ளி கட்டிடத்தை தனிநபர்கள் இரண்டுபேர் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளி இடித்து தரைமட்டம் -  பொதுமக்கள் ஆவேசம்...

ஒசூர் சீதாராம்நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான அரசுப்பள்ளி உள்ளது. துவக்கப்பள்ளியாக இருந்த இந்த அரசுப்பள்ளி பின்னர் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இடப்பற்றாக்குறை மற்றும் பல்வேறு இடையூருகள் காரணமாக அருகில் புதிய கட்டிடத்திற்கு இந்த அரசுப்பள்ளி மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த அரசுப்பள்ளி கட்டத்தில் பள்ளியின் பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டு, அவ்வப்போது  மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை திடீரென இரண்டு பேர் இந்த அரசுப்பள்ளியின் கட்டிடத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்துள்ளனர். அப்போது அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் எதற்காக இடிக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் இந்த அரசுப்பள்ளி இடத்தை நாங்கள் வாங்கி விட்டோம் எனக்கூறி இயந்திரம் கொண்டு பள்ளி கட்டிடம் முழுவதையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இதுகுறித்து உடனடியாக அப்பகுதியினர் ஒசூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், போலீசருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.