டி.எம்.எஸ். வளாகத்தில் மரபணு பகுப்பாய்வு கூடம்...  உருமாறிய கொரோன வைரஸ்களை கண்டறியலாம்...

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் மரபணு பகுப்பாய்வு கூடம் நிறுவப்பட்டுள்ளது

டி.எம்.எஸ். வளாகத்தில் மரபணு பகுப்பாய்வு கூடம்...  உருமாறிய கொரோன வைரஸ்களை கண்டறியலாம்...

சென்னையில் 4 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்ட மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், சென்னை டி.எம். எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் இயங்கும் மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மரபணு பகுப்பாய்வு கூடம் நிறுவப்பட்டுள்ளது என்றும்,

இந்த ஆய்வு கூடத்தை கொரோனா மரபணு பகுப்பாய்வு கூடமாக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கூட்டமைப்பு அங்கீகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். முதலமைச்சரால் சென்னையில் கொரோனா மரபணு பகுப்பாய்வு கூடம் தொடங்கப்பட்டு, மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில், தற்போது அதற்குரிய அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

இந்த ஆய்வகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ்களை ஆரம்ப நிலையிலேயே விரைவாக கண்டறிந்து, அதனடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனா நோயின் தாக்கத்தினை பெருமளவு தடுத்திட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.