மின்கம்பம் அமைக்க எதிர்ப்பு... டிரான்ஸ்பார்மரில் ஏறி போராடிய முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்...

விளாத்திகுளம் அருகே தனியார் நிறுவனம் மின்கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர்.

மின்கம்பம் அமைக்க எதிர்ப்பு... டிரான்ஸ்பார்மரில் ஏறி போராடிய முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்...

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சின்னமநாயக்கன்பட்டியில் தனியார் சூரிய மின் உற்பத்தி நிறுவனம் மின் உற்பத்தி செய்து வருகிறது. இதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உயர் மின் அழுத்த கம்பங்கள் மூலமாக நாகலாபுரம் துணை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லபடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக சாலையில் மரங்கள் வெட்டப்பட்ட போது அப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, சாலை வழியாக கொண்டு செல்லமால் மாற்று பாதையில் செல்ல வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை வைத்தது மட்டுமின்றி, போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தனியார் நிறுவனம் மற்றும் அரசு சார்பில் சமதான கூட்டமும் நடைபெற்றது. ஆனால் மாற்று பாதையில் தான் கொண்டு செல்ல வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளதால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் இன்று மதியத்திற்கு மேல் திடீரென காவல்துறை பாதுகாப்புவுடன் மீண்டும் மின்கம்பங்கள் நடும் பணி தொடங்கியது. இதற்கு நாகலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் உலகம்மாள், அவரது கணவன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, வழக்கறிஞர் முத்துராஜ் மற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வழக்கு நிலுவையில் இருக்கும் போது அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து பணிகள் நடைபெற்றதால் ஆத்திரமடைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி நாகலாபுரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி பணிகளை நிறுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் சிலர் சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையெடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் முனியசாமி கீழே இறங்க மறுத்த காரணத்தினால் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் முனியசாமியை இறக்குவதற்கு முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முனியசாமி இறங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவரை மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்து கீழே தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதியில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அடித்து விரட்டினர்.