"கடவுள் மறுப்பாளர் எவ்வாறு கடவுள் பிரச்னையை தீர்க்க முடியும்?" முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் காட்டம்!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 ஆயிரம் கோயில்களில் ஒரு கோயிலுக்கு கூட வராத முதலமைச்சருக்கு கீழ் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பது அதர்மம் என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் விமர்சித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த குந்தச்சப்பை இன்னும் கிராமத்தில் 1970 ஆம் ஆண்டு கட்டப்பட்டு பொதுமக்களால் வழிபட்டுக் கொண்டிருக்கும் மஹா லிங்கேஸ்வரர் என்னும் கோயிலை அறநிலையத்துறை எடுத்து நடத்தப் போகிறது என்று கடந்த 2020 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து ஊர் மக்கள் இந்த செயலை கண்டித்து பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், முன்னாள் தமிழக சிலை தடுப்பு டிஜிபி பொன்மாணிக்கவேல் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிராமத்துக்கு வந்திருந்தார். 

தொடர்ந்து கோயில் வளாகத்தில் கூட்டம் ஒன்றை கூட்டிய பொன்மாணிக்கவேல் இந்த கோவிலை அற நிலையத் துறை எடுக்க விடமாட்டோம் என்றும் இதற்கு பொதுமக்கள் ஒத்துழைத்து ஒற்றுமையாக போராட வேண்டும் என்றும் கூறினார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன் மாணிக்கவேல், தென்னிந்தியாவில் உள்ள இந்து திருக்கோயில்களை அரசே ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பிரதமர் மோடி கூறியதற்கான ஆதாரம் இந்த கோவில் பிரச்சனை தான் எனக் கூறியதுடன் நீலகிரி மாவட்ட மக்களின் அமைதியை கெடுத்தால் தங்களுடைய அமைதி கெடும் என பொன்மாணிக்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்த கோயிலுக்கு உண்டான பிரச்சனைய தீர்க்க அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு வர இருப்பதாக தகவல் இருப்பதாகவும், ஒரு கடவுள் மறுப்பாளர் கடவுள் பிரச்சனையை முடிக்க முடியாது என்பதால் அவர் எங்களுக்கு தேவை இல்லை எனக் கூறியுள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள 38 ஆயிரம் கோயில்களில் ஒரு கோயிலுக்கு கூட வராத முதலமைச்சருக்கு கீழ் அமைச்சராக இருப்பது அதர்மம் எனவும் தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வரும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்றும் காட்டமாக பேசியுள்ளார்.