குற்றாலத்தில் அரசின் தடையை மீறும் வனத்துறையினர்... அரசியல் பிரமுகர்களுக்கு அனுமதி அளிப்பதாக புகார்...

தென்காசியில் தடையை மீறி அரசியல் பிரமுகர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு மட்டும், குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குற்றாலத்தில் அரசின் தடையை மீறும் வனத்துறையினர்... அரசியல் பிரமுகர்களுக்கு அனுமதி அளிப்பதாக புகார்...
தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் குற்றாலத்தில், ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் சீசன் களைகட்டுவது வழக்கம். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் அருவிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் வேடிக்கை பார்த்தும், புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர்.
 
குற்றாலத்தில் தங்கும் விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சி பிரமுகர்களும், செல்வந்தர்களுமே அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிற்றருவியின் நுழைவு பகுதி வழியாக இவர்களை வனத்துறை அதிகாரிகள் ரகசியமாக குளிக்க அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்த வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
 
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசுக்கு எதிராக வனத்துறை செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது போன்ற முறைகேடு சம்பவங்களை தவிர்க்கும் வகையில் சிற்றருவி மீண்டும் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.