கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை; மீட்பு பணியில் வனத்துறை!

கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை; மீட்பு பணியில் வனத்துறை!

சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சிறுத்தை ஒன்று சாலையோரம் உள்ள தண்ணீர் இல்லாத 60 அடி கிணற்றில் தவறி விழுந்தது. அதனை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இவை அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலையோரம் நிற்பதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று புது குய்யனூர் என்ற கிராமம் அருகே சாலையோரம் உள்ள தண்ணீர் இல்லாத சுமார் 60 அடி கிணற்றில் தவறி விழுந்தது.

இதனைக் கண்ட அவ்வழியாக வாகனத்தில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த  வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தையை மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுத்தை கிணற்றில் தவறி விழுந்த தகவல் அருகே உள்ள கிராமங்களுக்கு பரவியதால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க:"தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மீண்டும் வரிச்சலுகை" திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை!