இனி உஷாரா இருங்க.. சென்னையில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்... எவ்வளவு தெரியுமா?

சென்னையில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் இன்று முதல் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இனி உஷாரா இருங்க.. சென்னையில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்... எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாக சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக சென்னை மக்கள் அனைவரும் பொதுவிடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று  சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு இன்று முதல் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்கங்கள், வணிக வளாகங்கள், மற்றும் திருமண மண்டபங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உரிமையாளர்களுக்கு பெருநகர மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படி சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் வணிக நிறுவனங்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க பொறுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் மீது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உத்தரவின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், சென்னை மாநகர பேருந்துகளில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேருந்துகளில் நடத்துநர், ஓட்டுநர் ஆகியோரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சென்னை மாநகர பேருந்துகளில் பயணிப்போர் முகக்கவசம் அணிந்திருப்பதை நடத்துனர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.